மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 23 டிசம்பர், 2010

வரலக்ஷ்மி விரதத்தில் பாய்ந்ததா மன்மதன் அம்பு ?


சர்ச்சைகளுக்கு கமலஹாசனோ  அல்லது அவரது படங்களோ எப்போதும் விதி விலக்கல்ல, அதுவும் அவர் கடவுள் பற்றி  சொல்ல வாயெடுத்தாலே  போதும் கண்டனக்கொடி பிடிக்க இந்து மத காவலர்கள் என தங்களை அடையாளபடுத்தி கொள்பவர்கள் துடிப்பார்கள்...  அப்படி தற்போது அவர் கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பது மன்மதன் அம்பு படத்தில் வரலக்ஷ்மியிடம் தன் துணை குறித்த எதிர்பார்ப்பை ஒரு பெண் வேண்டுவதாய் இடம் பெற்ற அவருடைய கவிதை. உண்மையிலேயே கடவுளை இழிவுபடுத்தும் பாடல்தானா அது , கடவுள் எதிர்ப்புதான் அதன் நோக்கமா....... அதற்கு முன் அந்த சர்ச்சைகுரிய கவிதை வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு .

  "கலவி செய்கையில் காதில் பேசி கனிவாய் மெலிதாய் கழுத்தை கவ்வும் வெள்ளை  பளிச்சிடும் பற்கள் வேண்டும் 

குழந்தை வாயை முகர்ந்தது போல  கடும் நாற்றம் இல்லாத வாயும் வேண்டும்

காமக்  கழிவுகள் கழுவும் பொது கூட நின்றவன் உதவிட வேண்டும்

சமையலின் போதும்  உதவிட வேண்டும்

சாய்ந்து அழுதிட திண்தோல் வேண்டும்

மோதி கோபம் தீர்க்க வசதியாய் பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்

அதற்கு பின்னால் துடிக்கும் இதயமும் பின் ரத்தம் பாய்ச்சி நெகிழ்த்த சிந்தையும் வேண்டும்

மூளை மடிப்புகள் அதிகம் உள்ள மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பு என வழங்கி புலங்கிட பணமும் வேண்டும் 

நேர்மை வேண்டும்,பக்த்தியும்  வேண்டும் 

எனக்கென சுதந்திரம் கேட்கையில் பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும் 

இப்படி கணவன்  வரவேண்டும் என நான் ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன் 

வரம்தருவாள்  என் வரலக்ஷ்மி  என கடும் நோன்பு முடிந்ததும் தேடி போனேன் 

பொடி நடை போட்டே இடை மெலிய என காலையும் மாலையும் தொந்தி கணபதிகள் திரிய கண்டேன்

முற்றும் துறந்த மங்கயரோடு அம்மண துறவிகள் கூடிட கண்டேன்

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தாலும் சுட அவன் அக்காள் இல்லாத வேலையில் சக்களத்தி  வேண்டும் என்றான்

எக்குலம் ஆனால் என்ன என்று வேற்று மதம் வரை தேடி பாத்தேன் 

வரவர புருஷலட்சணம் உள்ளவர் திருமண  சந்தையில் மிக மிக குறைவு

வரம் தர கேட்ட வரலக்ஷ்மி உனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி 

நீ கேட்ட வரங்கள் எது வரை பலித்தது

உறங்கி கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன்  ஆள்  எப்படி 

பிரபந்தம் சொன்ன அத்தனை   சேட்டைகளும் வாஸ்தவமாக நடந்தது  உண்டோ 

இதுவும் முதுவும் அதுவும் செய்யும் இனிய கணவர் யாருக்கும் உண்டோ 

உனக்கேனும்  அது அமைய பெற்றால் உண்மையிலேயே நீ அதிர்ஷ்டசாலிதான்

நீ அது போல் எனக்கும் அமைய செய்யேன் ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே" 

இதுதான் அந்த கவிதை வரிகள், இதில் கடவுளை இழிவு படுத்தியது எங்கு என புரியவில்லை, என் கண்ணோட்டத்தில் இந்த கவிதை, பிரார்த்தனை விருபதிற்கும் யதார்த்தத்திற்கும் நடுவில் இருக்கும் முரண்பாடுகளை வெளிபடுத்தும் ஒரு பாடலாகவே உள்ளது,          
      பின்பு எதன் காரணமாக இது கடவுளை  இழிவு படுத்தும் பாடலாக மாறியது ?
மாறியது என்பதை விட மாற்றப்பட்டது என்பதே சரியானது. உண்மையில் இந்த பாடல் ஒரு அழகான கவிதை நடையில் அமைந்த உரையாடலாகவே இயற்றப்பட்டுள்ளது. ஆங்காங்கே கமலின் நாத்திக நையாண்டியும், நகைச்சுவையும் அற்புதமாக உள்ளது.

நாத்திக நையாண்டிக்கு உதரணமாக இரண்டு வரிகளை குறிப்பிடலாம்  
                                              
      "நேர்மை வேண்டும்,பக்த்தியும்  வேண்டும் 

      முற்றும் துறந்த மங்கயரோடு அம்மண துறவிகள் கூடிட கண்டேன்"

முதல் வரியில் நேர்மையும் பக்தியும் முரன்படனவை என்பது போல பாடப்பட்டிருக்கும் ,
          இரண்டாவது வரியோ இன்னும் கடுமையாக ஆன்மீக துறவி என வேடம் இடுபவர்களை சாடி இருக்கும் , 
           பொதுவாக நாம் மரியாதை நிமித்தமாக அகமும் புறமும் அனைத்தும் இழந்தவர்களை முற்றும் துறந்தவர்கள் என்றும், ஆடை மட்டும் இழந்தநிலையை அம்மணம் என்றும் கூறுவோம், இந்த வரியில் பெண்களை முற்றும் துறந்தவர்கள் என்று உயர்வு நவிழ்ச்சியோடும், மனதை துறக்காத துறவியை அம்மணமாணவன் என இழிவு படுத்தியும் பாடப்பட்டிருக்கும்.  அழகிய சந்தங்களோடும், கருத்துச்செரிவோடு  அமைந்த ஒரு அழகான பாடலாகவே இது உள்ளது.  

       பின்பு எதற்காக இதை தடை செய்ய போராடினார்கள்!!!!!!

வார்த்தைகள் கொச்சையாக இருபது போல தோன்றுவதாலா? அல்லது          

விரத வேண்டுதல் பாடலில் கலவி பற்றி பேசியதாக  இருப்பதாலா?

இல்லை வரலக்ஷ்மியிடம் அரங்கனை பற்றி அந்தரங்கமாக விசாரித்ததாலா?

தமிழ் இலக்கியம் பரிச்சயம் ஆனவர்களுக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவு மரியாதையாக கையாளப்பட்டு உள்ளது என்பது தெளிவாக தெரியும், இலக்கிய நடையில் இதற்கு அனுமதி உண்டு என்பதும் புரியும், வார்த்தைகளின் பொருளை நாம் கொச்சையாக பார்ப்பதால் இந்த வார்த்தைகளும் அப்படி தோற்றம்  அளிக்கின்றனவே அன்றி உண்மையில் இவை மரியாதையான பொருள் கொண்டவையே.......

அடுத்து கடவுள்  வேண்டுதலில் கலவி பற்றி பாடுவது .......ம்ம்ம்ம் சற்றே யோசிக்க வேண்டியதுதான்.... இந்தப்பாட்டில்  மட்டும் தான் என்றால்.

ஆனால் கடவுள்  வழிபாட்டில் கலவி என்பது தொன்று தொட்டே இருந்து வரும் ஒன்றுதானே, ஆதாரம் வேண்டுபவர்கள் பல பிரபல கோவில்களின் கோபுர சிலைகளை பார்க்கவும்,தாமிரச்சபை எனப்படும் நெல்லையப்பர் திருகோவிலின் முகப்பு மரச்சிற்பங்களில் அனைத்தும் கலவி கட்சிகளே....( நான் நேரில்  பார்த்தது), கஜுரஹோ சிற்பங்களும் கடவுள் வழிபாட்டில் கலவிக்கு தரும் இடத்திற்கு சான்று, சிவலிங்க வடிவத்தின்  ஆதார ஸ்ருதியும் அதுதானே.... வெறும் சிலை வடிவங்கள் மட்டும் அல்ல,  இந்து மதத்தில் கலவி முறையில் கடவுள்  வழிபாடும்  உண்டு..அதன்முலமாக ஞானம் அடைந்த மகான்களும் உண்டு, இந்து சமயத்தில் அம்மன் வழிபாடு என பிரபலமாக போற்றப்படும் சாக்த வழிபாட்டில் பிரபலமாகாத  ஒரு முறை உண்டு அதன் பெயர் வாமாச்சாரம், இது பெண்ணை தெய்வமாக பீடத்தில் (நிர்வாணமாக)அமர்த்தி, அந்த பெண்ணையே தெய்வமாக பூஜித்து, அவள் விருப்பமாக அவளைக்கூடி அவளிடம் சரணடைவதன் மூலம் ஞானம் அடைவதே இந்த வழிபாட்டின் நோக்கம்.  அபிராமி அந்தாதி வழங்கிய அபிராமிப்பட்டர் இந்த வழிபாட்டைத்தான் பின்பற்றியதாக படித்து உள்ளேன். 
இப்படி இந்து சமயத்தில் கலவிக்கு இவ்வளவு முக்கியமான இடம் உள்ள போது  வழிபாட்டு பாடலில் கலவி பற்றி பாடுவது எப்படி தவறாகும்...  

அல்லது லக்ஷ்மியிடம் உன் கணவன் எப்படி என அந்தரங்கமாய் அரங்கனை விசாரித்தது குற்றமாகுமா,அப்படி விசாரித்தது குற்றம் எனில் கண்ணனை  காதலனாய், கணவனாய் தன் மோகம் தீர்க்கும் ஒருவனாய் எண்ணி பாடிய ஆண்டாளும் தவறோ...
அவள் பாடிய பாசுரங்களும் கேவலமாகுமோ, 
மார்கழி முப்பதுநாளும் பாடும் திருப்பாவையும் தெருவில் வீசவேண்டிய ஒன்று தானோ..... 
நாச்சியார்த்திருமொழியும்  நச்சு வகையில் சேர்த்திதானோ....

           ஆண்டாள் பாடினால் அது அரங்கனுக்கு உகந்தது, ஒரு ஆண் எழுதினால் அது அரங்கனையும் அவன் மனைவியையும் இழிவு படுத்துவது ஆகுமா.

ஆக மொத்தத்தில் ஒரு நல்ல கவிதானுபவத்தை ரசிகர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்த பெருமையை இந்துமதகாவலர்கள் அடைந்துவிட்டனர்.  

       இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் இந்துமதத்தை   களங்கபடுத்துகிறது எனக்  கதறும் மனிதர்களால்தான் இந்து சமயம் நோய்வாய்ப்பட்டுள்ளது......சமயத்தை வெறும் சடங்குகளாக மாற்றி சாக்கடையாக்கிவிட்டதும் இது போன்ற மனிதர்கள்தான்.....

         நான் நகைப்பது எதைப்பார்த்தெனில் கமலுக்கு கடவுள் இல்லை என்ற கோட்ப்பாட்டில் இருக்கும் உறுதிகூட கடவுளை நம்பும் சமய காவலர்களுக்கு இல்லை என்பதுதான், இல்லையெனில் கடவுள் மறுப்பு பேச்சுக்கள் இவர்களை ஏன் பாதிக்கவேண்டும், 
கண்ணிலாதவன் சூரியனை மறுத்தால் கண்ணுள்ளவன் நகைப்பானே  அன்றி அவனுக்கு பதில் கூறிக்கொண்டிருக்கமாட்டான்.......              .

அந்த பாடலை  கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் கீழ்க்கண்ட முகவரி உதவும்.....
  http://mp3.tamilwire.com/manmadhan-ambu-2010.html 
 
   உங்கள் விமர்சனங்கள் வரவேற்பிற்குரியது....... வரவேற்க காத்திருக்கிறேன்.



   


2 கருத்துகள்: